Saturday, September 20, 2008

நினைவில் வராத முகம்

பயங்கரமான சத்தம். என் தலையிலிருந்து கால் வரை உடலெங்கும் நடுங்கியது. உடலெல்லாம் வியர்த்து வழிந்தது. படுக்கையிலிருந்து எழாமல் மிகவும் கஷ்டப்பட்டு கண்களைத் திறந்துப் பார்த்தேன். அறையெங்கும் கும்மிருட்டு. இரவு மணி ஒன்றோ இரண்டோ இருக்கலாம். டிரான்ஸ்பார்மர் ஏதோ வெடித்திருக்கும் போல. மின்சாரம் போய் விட்டது. சற்று நேரம் முன் கேட்டசத்தம் டிரான்ச்பார்மரால் தான் என்பதை உணர்ந்தேன். இருந்தாலும் என் உடல் நடுக்கம் இன்னும் நிற்க வில்லை. மனிதர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைக் கண்டால் பயம்; சிலருக்கு தண்ணீரைக் கண்டால் பயம்; சிலர் கார் ஓட்ட தெரியும்; ஆனால் ஓட்டுவதற்குப் பயம் என்பார்கள். சிலர் பயம் என்பதே தங்களுக்குக் கிடையாது என்பார்கள். இவர்களுக்குப் 'பயம்' என்ற சொல்லைக் கேட்டாலே பயம் போலும். எனக்கும் ஒரு பயம் உண்டு; அது சத்தத்தைக் கேட்டால் உண்டாகும் பயம். ஆனால் இது பிறவி பயம் இல்லை. நடுவில் வந்தது தான்.

சுமார் இருபது வருடங்களுக்கு முன் நான் திருநெல்வேலியில் பள்ளிஇறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் எங்கள் தெருவில் நின்று கொண்டு என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் நண்பன் சொன்னான் - "இரண்டு கண்கள் உன்னை பார்த்துக் கொண்டிருக்கின்றன." சுற்றும் முற்றும் பார்த்தேன். உண்மை தான். ஓர் அழகான பெண்ணுடைய கண்கள் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தன. அந்தப் பெண் என்னை விட மூத்தவளாகத் தெரிந்தாள். என்னை 'அந்த' நோக்கத்தில் பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் என்னை ஏன் விடாமல் உற்று நோக்கிக் கொண்டிருந்தாள் என்று புரியவில்லை.

இந்த இருபது வருடங்களில் - ஏன் அதற்கு முன்பு நான் பதினைந்து வருடங்களையும் சேர்த்து இவளைப் போல் ஓர் அழகான பெண்ணை நான் பார்த்ததில்லை. நேரிலோ சினிமாவிலோ ஓவியத்திலோ சிற்பத்திலோ இவளைவிட அழகிய உருவம் இதுவரை என் கண்களுக்குக் கிட்டவில்லை. அவள் தெருவில் நடந்து செல்லும்போது ஒரு தேவதை நடந்து செல்வதைப் போல இருக்கும். தெருவிலுள்ள ஆண்கள் அவளைப் பிரமித்து பார்ப்பார்கள். பெண்கள் பொறாமையால் பார்ப்பார்கள். அவள் அந்த தெருவுக்கு வந்த சில நாட்களிலேயே தாக்கத்தை உருவாக்கினாள் என்பதென்னவோ உண்மை.

அவளுடைய தந்தையின் வேலை மாற்றத்தால் இந்த ஊருக்கு ஒரு மாதம் முன்பு தான் குடி வந்துள்ளாள் என்பதையும், கல்லூரிப் படிப்பை இந்த ஆண்டு தான் நிறைவு செய்தாள் என்பதையும் நண்பர்கள் மூலம் விசாரித்து தெரிந்து கொண்டேன். தெருவிலும் கோவிலிலும் அவளைப் பல முறை பார்த்துள்ளேன். எப்போதுமே அவள் என்னை உற்றுப் பார்ப்பாள். அந்தப் பார்வையில் என்னிடம் அவள் எதையோ சொல்லத் துடிக்கும் தவிப்பு எனக்குப் போகப் போகத் தான் புரிய ஆரம்பித்தது. அந்த விஷயம் என்னவாக இருக்கும் என்று என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. எப்போதாவது அவளிடம் பேசி அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாமோ என்று கூட நினைத்தேன். அதே சமயம் என்னுடைய ஊகம் தவறாக இருந்து விட்டால் என்ன செய்வதென தயங்கினேன்.


நண்பர்களுடன் தெருவில் நின்று பேசும் சாக்கில் பலமுறை அவள் வீட்டுக்கு முன்பு நின்று நோட்டம் விட்டுள்ளேன். அவள் இருக்கும் போதெல்லாம் என்னுடைய கண்களை உற்று நோக்குவாள்; அவளுடைய தவிப்பும் எப்போதும் போல் மாறாமல் இருந்தது.



நாட்கள் நகர்ந்தன. மூன்றே மாதங்களில் அவள் இந்தத் தெருவை விட்டுப் போவாள் என்று நான் சற்றும் நினைக்க வில்லை. அவள் குடும்பத்துடன் கிளம்புகிறாள் என்பதை நண்பர்கள் மூலம் தெரிந்து கொண்ட நான் அவள் வீட்டை நோக்கி விரைந்தேன். அதற்குள் அவளுடைய குடும்பம் காரில் ஏறி விட்டனர். நான் வந்ததை எப்படி உணர்ந்தாளோ அவள் மட்டும் காரிலிருந்து எட்டிப் பார்த்தாள். அவளுடைய கண்கள் எப்போதும் போல என்னை உற்று நோக்கின - அதே தவிப்புடன்.

அதன் பிறகு அவளை நான் பார்க்கவேஇல்லை. அவள் எங்கே சென்றாள் என்றும் தெரியவில்லை. அவளைப் பற்றிய எந்த செய்தியும் எனக்குத் தெரியவில்லை. அழகான ஓவியத்தையோ சிற்பத்தையோ காணும்போது அவள் எனது நினைவுக்கு வருவாள். அது என்ன காரணமோ தெரியவில்லை, எவ்வளவு யோசித்தாலும் அவள் முகம் மட்டும் என் நினைவுக்கே வராது.

வருடங்கள் உருண்டோடின; வாழ்க்கையில் பல மாற்றங்கள். அவளை நான் மறந்தே போனேன். ஒருமுறை குடும்பத்துடன் ஜெய்பூர் போயிருந்த போது தான் அவளை மீண்டும் பார்த்தேன். பல வருடங்களுக்குப் பிறகு அவளைப் பார்ப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவளை நான் பார்த்தது கூட்ட நெரிசலான ஒரு பஜாரில். அவளுடைய கண்கள் இப்போதும் என்னை உற்று நோக்கின. அந்தக் கண்களில் உற்சாகத்தைக் கண்டேன். அவள் கண்களில் இப்போதும் அந்தத் தவிப்பைக் கண்டேன். அதே சமயத்தில் ஒரு பிரச்னையிலிருந்து விடுபடப் போகும் வழியைக் கண்டுவிட்டவள் போல பிரகாசத்தையும் அவளது கண்களில் கண்டேன். அவளுடன் யாரும் துணைக்கு வந்ததைப் போல தெரியவில்லை. அவளை நோக்கி சென்று அவளிடம் பேசலாமா என்று நினைத்தேன். அதே சமயத்தில் அது சரியாக இருக்குமா என்று தயங்கினேன்.

எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவளைப் பார்க்கிறேன். மீண்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா. உண்மையிலேயே அவள் கண்களில் தெரிவது தவிப்பு தானா? என்னிடம் எதாவது சொல்ல தவிக்கிறாளா? எது நடந்தாலும் சரி, அவளிடம் இம்முறை பேசி விடுவதென தீர்மானித்தேன். அவளைத் திரும்பிப் பார்த்த போது தான் உணர்ந்தேன். யோசித்துக் கொண்டே அவளை விட்டு வெகு தூரம் நடந்து வந்து விட்டேன். அவள் இன்னும் அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தாள். நான் போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளை நோக்கி வேகமாக நடந்தேன். திடீரென்று ஏதோ சத்தம்; காது செவிடாகும்படியான பயங்கர சத்தம். என் கண்களிலிருந்து நீர்; உடலெங்கும் நடுக்கம்; சுற்றி எங்கும் கூச்சல்; குழப்பம். புகை மண்டலம். என்ன நடக்கிறதென்று ஒரு நிமிடம் புரியவில்லை. அடுத்த கணம் நான் பார்த்த காட்சி என் இதயத்தை நிறுத்தி விடும்படியான பயங்கரமான காட்சி. என் எதிரில் மனித உடல்கள் சடலங்கலாகச் சிதறி கிடந்தன. எங்கும் ரத்த வாடை; எல்லோரும் பயத்திலும் வழியிலும் துடித்த்க் கொண்டிருந்தனர், சிலர் முகம் தெரியாத அளவுக்குச் சிதைந்து கிடந்தனர். இந்த கூட்டத்தில் அவள் எங்கே? எல்லா இடங்களிலும் சுற்றி தேடினேன். அவளை காணோம். அவளுக்கு நேர்ந்ததென புரியாமல் தவித்தேன். கடைசிவரை அவளைப் பற்றி அறிய முடிந்த வரை முயன்றேன். ஆனால் அவள் மறைந்தாளா தப்பித்தாளா என்பதை மட்டும் என்னால் அறியவே முடியவில்லை.

இந்தச் சம்பவத்திலிருந்துதான் எனக்குச் சத்தத்தைக் கேட்டால் பயம் உண்டாகியது. எங்கே எந்த சத்தம் கேட்டாலும், உடல் நடுங்கும். கூடவே அவளுடைய நினைவும் வரும். ஆனால் அவளுடைய முகம் மட்டும் நினைவுக்கே வராது.

Saturday, July 19, 2008

கல்லறைத் தோட்டம்

நகரத்திலிருந்து சுமார் முப்பது கிலோ மீட்டர்கள் தள்ளியிருந்த கட்டிடத்திலிருந்து, நகரத்தின் மையப் பகுதியிலிருந்த கட்டிடத்துக்கு எங்கள் குழுவை இடமாற்றம் செய்ய எங்கள் நிறுவனத்தின் நிர்வாகம் முடிவு செய்தது. அந்த முடிவை அறிந்ததும் எங்கள் குழுவைச் சேர்ந்த பலரும் மிகவும் வருத்தப்பட்டார்கள். நகரத்தின் மையப் பகுதிக்கு இடம் பெயர ஏன் வருத்தப் பட வேண்டும் என்று தோன்றலாம். அதில் காரணம் இல்லாமல் இல்லை. புறநகர் என்றால் நிறுவனத்தின் பஸ்ஸில் பயணிக்கலாம். நகருக்குள் மாறினால் சொந்த வண்டியிலோ பஸ்-டிரைனிலோ தான் வர வேண்டும். மேலும், புற நகரிலிருந்த நிறுவனக் கிளை எல்லா வசதிகளுடன் கூடிய புத்தம் புது கட்டிடம். நகரத்திலுள்ள கிளையோ மிகவும் பழைய கட்டிடம்; ஏசி வேலை செய்யாது. வெளியிலிருந்து பார்க்க அழுக்காகத் தோன்றும் கட்டிடம். கேன்டீன் மொட்டை மாடியில்; ஒரு கையில் அப்பளத்தைப் பிடித்துக் கொண்டுதான் சாப்பிட வேண்டும்; இல்லையெனில் பறந்து போகும். இத்தகைய காரணங்களால் பலருக்கும் இந்த கிளை பிடிக்கவில்லை.

எனக்கு மட்டும் இந்தக் கிளைக்கு மாறியதிலிருந்து மகிழ்ச்சி பிடிபடவில்லை. அதற்குக் காரணம் அக்கட்டிடத்துகுப் பின் பகுதியிலிருந்த பழைய சர்ச்சும் கல்லறையும் தான். சென்னையின் மையப் பகுதியில் மரங்களடர்ந்த விசாலமான, கூட்டம் சற்றுமில்லாத, அமைதியான இப்படியொரு இடத்தைப் பார்த்ததில் என்னால் மகிழ்ச்சியைத் தாங்க முடியவில்லை.

பொய் முகங்களிலிருந்து தப்பிக்கவும், மென் பொருள் துறையின் மன அழுத்தங்களிலிருந்து தப்புவதற்கும் எனக்கொரு வடிகால் வேண்டியிருந்தது. எப்போதெல்லாம் மன அழுத்தம் எனக்கதிகமாகிறதோ, அப்போதெல்லாம் சர்ச்சுக்கு போய் அமர்வதிலோ, சமாதிகளுக்கிடையில் நடப்பதிலோ நேரத்தைச் செலவழித்தேன்.

சமாதிகள் மிகவும் பழைமையானவை. சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக மறைந்த பலருடைய சமாதிகள் இந்தத் தோட்டம் எங்கும் நிறம்பிஇருந்தன. நெருக்கமாக பல மரங்களால் சூழப்பட்ட இத்தோட்டம் மனதுக்கு அமைதியைக் கொடுத்தது. பெயரே தெரியாத பல பறவைகளின் ஒலியைக் கேட்டுக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு எதாவது ஒரு மரத்தடியில் அமர்ந்தால், வேலைப் பளுவால் ஏற்படும் மன அழுத்தமும், பொய்களால் ஏற்படும் வெறுப்பும் சற்று நேரத்துக்காவது மறந்து போகும்.

வாரத்துக்கு ஒரு தடவை மட்டுமே அங்கே போய்க் கொண்டிருந்த நான், நாட்கள் செல்லச் செல்ல அநேகமாக தினமும் அங்கே போக ஆரம்பித்தேன். என்னுடைய அலுவலகத்தில் என்னைப் பற்றி பலரும் பலவிதமாகப் பேச ஆரம்பித்தார்கள். காதலியைக் காணப் போவதாகச் சிலரும், கிறிஸ்துவ மதத்துக்கு மாறப் போவதாகச் சிலரும் பேசிக் கொண்டனர். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்குத் தேவை அமைதி. அதைத் தேடி நான் செல்வதை இவர்களின் வெறும் பேச்சால் தடுக்க முடியாது.

சமாதி தோட்டத்தில் எதாவது ஒரு மரத்தடியில் நான் அமர்ந்தவுடன் கேட்கும் பறவைகளின் ஒலி, ஏதோ அப்பறவைகள் எல்லாம் என்னுடைய நண்பர்கள் ஆகி விட்டதைப் போலவும், என் வருகையால் மகிழ்ந்து குரல் எழுப்புவதாகவும் எனக்குத் தோன்றும். நான் அங்கே போக ஆரம்பித்த புதிதில் என்னைக் கண்டு குரைத்த இரண்டொரு நாய்களும் நான் தினம் போக ஆரம்பித்தவுடன் நட்பாக வாலாட்ட ஆரம்பித்தன. அச்சமாதி தோட்டத்திலிருந்த ஒரே காவலாளியும் எனக்குச் சிநேகமானான். இப்படி அந்தச் சமாதி தோட்டத்திலிருந்த எல்லாமே எனக்கு நெருக்கமானவையாக மாறி வந்தன.

இப்படியே சுமார் ஆறு மாதங்கள் கழிந்திருக்கும். ஒரு நாள் திடீரென்று எங்கள் குழு மீண்டும் புற நகருக்கு மாற்றப்பட்டது. என்னைத் தவிர அனைவரும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் மீண்டும் இந்தச் சமாதி தோட்டத்துக்கு வருகிறேன். எப்படி வந்தேன் என்று புரியவில்லை. ஏதோ என்னுடைய மனமே என்னை இங்கே பறந்து கொண்டு வந்து வைத்ததைப் போல உணர்கிறேன். இதோ இப்போது என் மனமார இங்கே உட்கார்ந்து அமைதியை நாடப் போகிறேன். நான் அமர்ந்தவுடன் ஏன் இந்தப் பறவைகள் எல்லாம் பெருங் கூச்சலிட்டுப் பறந்து விட்டன? அதோ அங்கே எதிரில் வரும் காவலாளி ஏன் என்னைப் பார்த்தும் பார்க்காதவன் போல போகிறான்? என்றுமில்லாமல் ஏன் தோட்டத்து நாய்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டு கத்துகின்றன? அங்கே என்ன கூட்டம்? என்னுடைய நண்பர்களும் குடும்பமும் நிற்கின்றன. யாருடைய சமாதியின் முன் இவர்கள் நிற்கிறார்கள்? சமாதியில் என்னுடைய பெயரல்லவா பொறித்துள்ளது? அப்போது நான்?

Saturday, May 3, 2008

ராஜூ

"டெல்லி வரனையே முடிச்சுடலாம்னு இருக்கேன்!"

தன்னுடைய தந்தை தாயிடம் சொல்வதை உள் அறையிலிருந்து ஒட்டு கேட்டாள் சாந்தி.

"பையன் கை நிறைய சம்பாதிக்கிறான். அக்கா தங்கச்சின்னு பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பம். சாந்தியை பையனுக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு தரகர் சொல்றார்!" - அப்பா மிகவும் சந்தோஷமாகச் சொன்னார்.

"எதுக்கும் அந்த பையனைப் பிடிச்சிருக்கான்னு சாந்தியை ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே!" - அம்மா சொன்னாள்.

"போடி பைத்தியக்காரி! அவ என் பொண்ணு! நான் கிழிச்ச கோட்டை அவ தாண்ட மாட்டா!"

அநாவசியமாக அப்பா பெருமையடித்துக் கொள்வதாகத் தோன்றியது சாந்திக்கு.

அப்பாவுடைய பிடிவாத குணத்தை நன்கு அறிந்திருந்த சாந்திக்கு கண்ணீர் வழிந்தது. அவளால் ராஜூவைப் பிரிந்து எப்படி இருக்க முடியும்?

ராஜூவும் அவளும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். அவர்களுடைய முதல் சந்திப்பு சண்டையில் ஆரம்பித்தது. பிற்பாடு, அது சிறிது சிறிதாக நட்பாக மாறி, கடைசியில் அது பிரிக்க முடியாத அன்பாக மாறியது.

ராஜூவைச் சாந்தி அவளுடைய உயிரை விட மேலாக நினைத்தாள். ராஜூவுடன் அவளுக்குச் சிநேகிதம் ஏற்பட்ட பிறகு தன்னுடைய பழைய தோழிகளை எல்லாம் அவள் மறந்தே போய் விட்டாள் எனலாம். எப்போதும் ராஜூவுடன் அவள் இணைந்தே காணப் பட்டாள்.

கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவர்கள் அடிக்கடி கடற்கரையிலும், சினிமா தியேட்டர்களிலும் சந்தித்துக் கொள்வார்கள். ராஜூவைப் பார்த்தால் சாந்திக்கு மகிழ்ச்சி கொள்ளாது. கடற்கரையில் ராஜூவின் கைகளைக் கோத்துக் கொண்டு மணிக் கணக்கில் பேசுவாள்.

இன்றும் ராஜூவைப் பார்க்க சாந்தி புறப்பட்டு விட்டாள். ராஜூவிடம் தன்னுடைய கல்யாண விஷயத்தைப் பற்றி சொல்லி, கல்யாணத்துக்கு மறுத்து விடவா என்று கேட்க வேண்டுமென நினைத்தாள் சாந்தி. ராஜூவை விட்டுவிட்டு டெல்லிக்குச் சென்று விட்டால், அவ்வளவு தூரத்திலிருந்து கொண்டு ராஜூவைச் சந்திக்க முடியாதே என்பது சாந்தியின் கவலை.

கடற்கரையில் ராஜூவைப் பார்த்தவுடன் சாந்தி ஓடிப் போய் கட்டிக் கொண்டு அழுதாள்; எல்லா விஷயத்தையும் சொன்னாள். அவளைத் தேற்றி சமாதானப்படுத்தி யதார்த்தத்தை விளக்கி, அவளைத் திருமணத்துக்குச் சம்மதிக்க வைத்தாள் ராஜூ என்று சாந்தியால் செல்லமாக அழைக்கப்படும் ராஜலக்ஷ்மி.

கார்

கௌதமுக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. சுமார் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள காரில் சென்னை சாலைகளை கௌதம் வலம் வந்து கொண்டிருந்தான். தான் இவ்வளவு விலையுயர்ந்த காரில் வலம் வருவதை மிகவும் பெருமையாக நினைத்தான் கௌதம். தன்னுடைய பல வருட கனவு நனவாவதைக் கண்டு கௌதம் மிகவும் பூரிப்படைந்தான்.

தன்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டான் கௌதம். அவன் படித்த கிராமத்தில் பள்ளிக் கூடமே கிடையாது. ஐந்து மைலுக்கு அப்பாலிருந்த நகரத்தில் இருந்த பள்ளிக்கு நடந்தே போய் வந்தான்.

பிற்பாடு, வறுமை காரணமாக பாதியிலேயே பள்ளிப் படிப்பை விட்ட கௌதம், நகரில் ஒரு ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்தான். சிறிது சிறிதாகப் பணம் சேர்த்து ஒரு பழைய சைக்கிளை விலைக்கு வாங்கிய கெளதம், சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்தான். அதுதான் அவனுடைய முதல் வாகனம்.

அவன் சாலை வழியாகச் சைக்கிளில் போகும்போது ஏதாவது கார் தென்பட்டால், அப்படியே ஓரமாக நின்று அதை வேடிக்கை பார்ப்பான். அவனுடைய கிராமத்தில் அப்போதெல்லாம் கார் என்பது மிகவும் அபூர்வமான வாகனம். எப்போதாவது தப்பித் தவறி கார் நின்றிருப்பதைப் பார்த்தால், கெளதம் அதைத் தொட்டுப் பார்க்காமல் விட மாட்டான். என்றாவது ஒரு நாள் காரில் ஊரை வலம் வர வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டான். சிறுகச் சிறுகப் பணம் சேர்த்து மிகவும் கஷ்டப்பட்டு கார் ஒட்டவும் கெளதம் கற்றுக் கொண்டான்.

கெளதம் எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது - இந்த நிலைக்கு வருவதற்கு. நினைத்துப் பார்க்க கௌதமுக்கு மலைப்பாக இருந்தது. அதற்குள் அவனுடைய முதலாளியின் வீடு வந்து விடவே, காரை அங்கு நிறுத்தி விட்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான் டிரைவர் கெளதம்.

ஆசை

அமுதாவை நினைத்த போது ரங்கனுக்குச் சந்தோஷம் பொங்கி வழிந்தது. அமுதாவின் செக்கச் செவேல் நிறமும், மொழு மொழு கன்னமும், கள்ளம் கபடமற்ற சிரிப்பும், சுண்டிஇழுக்கும் கண்களும் - அமுதாவை வர்ணிக்க தமிழில் வார்த்தைகளே இல்லை எனத் தோன்றியது ரங்கனுக்கு.

தன்னுடைய அந்தஸ்த்தைப் பற்றியும், அமுதாவுடைய தந்தையைப் பற்றியும் நினைத்தபோது தான் ரங்கனுக்குக் கவலை தொற்றிக் கொண்டது. ரங்கன் அமுதாவுடைய தந்தையிடம் வேலை பார்க்கும் கார் டிரைவர். அமுதாவுடைய தந்தையோ பணத் திமிர் பிடித்தவர்; எதிலும் அந்தஸ்தைப் பார்ப்பவர்; தன்னிடம் வேலை பார்ப்பவர்களை மனிதர்களாகவே மதிக்காதவர்; அமுதாவுடன் ரங்கன் பழகுவதை அவர் விரும்ப மாட்டார் என்பது ரங்கனுக்குத் தெரியும்.

ஆனால், அமுதாவுடைய தாய் மிகவும் நல்லவர்; எல்லாருடனும் பரிவுடன் நடந்து கொள்பவர்; அதுவும் ரங்கன் மீது தனி அன்பும் அக்கறையும் கொண்டவர். அமுதா தன் தாயுடன் இருக்கும்போது தான் ரங்கன் அமுதாவுடன் பேச்சு கொடுத்துள்ளான். அமுதாவுடைய தந்தை அருகிலிருந்தால் ரங்கன் அமுதாவைத் திரும்பிக் கூட பார்க்க மாட்டான்.

அமுதாவுடைய தந்தை ஒரு வாரம் வெளியூர் கிளம்பிப் போனார். அது தனக்குக் கிடைத்த நல்ல சந்தர்ப்பம் என்று ரங்கன் கருதினான். இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய வெகு நாள் ஆசையான அமுதாவுக்கு முத்தம் கொடுக்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள ரங்கன் திட்டமிட்டான்.

அமுதாவுடைய தாய் இருக்கும் போதே உள்ளே தைரியமாக நுழைந்த ரங்கன், அவர் எதிரிலேயே அமுதாவுக்குப் பல முத்தங்கள் கொடுத்தான்; தன் ஆசை தீர அமுதா என்ற மூன்று வயது குழந்தையைக் கொஞ்சி விட்டு திருப்தியுடன் வெளியேறினான்.

பேய் வீடு

விக்னேஷுடைய நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. மணி பன்னிரண்டு. நள்ளிரவு நேரம். சற்றே திறந்திருந்த ஜன்னலில் அமாவாசை இரவின் கும்மிருட்டு பயமுறுத்தியது. அனைத்துக்கும் மேலாக அறைக்கு வெளியிலிருந்து வந்த அந்த சலங்கைச் சத்தம் - அதுதான் விக்னேஷுடைய பயத்துக்கு முக்கியமான காரணம்.

விக்னேஷுடைய சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கம். சென்னையில் அவனுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரண வேலை கிடைத்தது. சென்னையில் அவனுக்குத் தெரிந்தவர்கள் யாருமில்லாததால், சூளைமேட்டில் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்தான். போன வாரம் தான் விக்னேஷ் அந்த அறையில் குடி வந்தான். அந்த ஒரு வாரத்தில் ஒரு நாள் கூட அவன் நிம்மதியாக உறங்கவில்லை.

அவன் அந்த அறைக்குக் குடிவந்த முதல் நாள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அடுத்த நாள் அந்தத் தெருவிலிருந்த பெட்டிக்கடைக் காரனிடம் பேசிய பிறகுதான் அவனக்குக் காரணம் புரிந்தது.

"ஏம்பா! இம்மாம் பெரிய வூர்ல உனக்கு வாடகைக்கு வூடா கிடைக்கல! போயும் போயும் பேய் வூட்ல குடி வந்துருக்கியே! அந்த வூட்டாண்ட இருக்கற கிணத்துல ஒரு பொம்பள வுளுந்து செத்து போச்சு!"

அந்த கடைக்காரன் சொன்ன பிறகு தான் விக்னேஷ் கவனித்தான் - அவனுடைய அறைக்கு வெளியே ஒரு வேப்ப மரமும் அதற்கருகே பாழுங் கிணறும் இருந்தன. அந்தக் கிணற்றில் விழுந்துதான் அந்தப் பெண்மணி தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று விக்னேஷ் நினைத்தான்.

அந்த விஷயத்தைக் கேள்விப் பட்டதில் இருந்தே அவனுக்கு இரவு தூக்கம் வருவதில்லை. வெளியில் சலங்கை அணிந்து கொண்டு யாரோ வருவதைப் போன்ற சத்தம். எழுந்து போய் கதவைத் திறக்க நினைத்தால், சலங்கைக் காலுடன் யாரோ ஓடி வருவதைப் போன்ற சத்தம். விக்னேஷ் அப்படியே பயத்தில் மீண்டும் படுத்து விடுவான்.

இன்று தன்னுடைய பயத்துக்கு ஒரு முடிவு காண விக்னேஷ் தீர்மானித்து விட்டான். இரவு பன்னிரண்டு மணி. இன்றும் சலங்கைச் சத்தம் கேட்டது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியே பார்த்தான் விக்னேஷ். அங்கே பெயர் தெரியாத ஓர் பூச்சி சுவரில் வினோத ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

பின் தொடர்ந்து...

பஸ் ஸ்டாப்பிலேயே அபிநயா அவனைக் கவனித்து விட்டாள். அவன் அபிநயாவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் பஸ் ஸ்டாப்பை விட்டு வீட்டை நோக்கி நடக்க, அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். அவன் பின் தொடர்வதைப் பார்த்து அபிநயா நடையை வேகப்படுத்தினான். அவனும் அதே வேகத்தில் அவளைப் பின் தொடர்ந்தான்.

போன மாதம் தான் அவளைப் பின் தொடர்ந்து வந்து அவளுடைய வீட்டைக் கண்டுபிடித்த ஒருவன், அவளுடைய அப்பாவிடம் அவளைப் பெண் கேட்க, பெரிய பிரச்னையாகி விட்டது. அவனும் அப்படிப்பட்டவனாக இருப்பானோ? நினைத்துப் பார்க்க அபிநயாவுக்கு வியர்த்துக் கொட்டியது. அவள் தன்னுடைய வீட்டை நோக்கி போகாமல், இப்போது வேறு பாதையில் வேகமாக நடக்க தொடங்கினாள். அவனும் அவளை விடாமல் பின் தொடர்ந்தான்.

கிட்டத்தட்ட அரை மணி நேரமாக அவள் நடக்க, அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். இப்போது அவன் வேகத்தை அதிகப்படுத்தி, அவளை நெருங்கினான். அபிநயா சுற்றும் முற்றும் பார்த்தாள். மத்தியான வேளையாதலால் தெருவில் மனித நடமாட்டம் இல்லை.

"ஏங்க, ஒரு நிமிஷம்!" அவன் அபினயாவை நிறுத்தினான்.

"நடேசன் சந்துக்கு எப்படிங்க போகணும்? ரொம்ப நேரமா தேடி அலைஞ்சும் கிடைக்கல! பஸ் ஸ்டாப்புல ஒருத்தர் நீங்க அந்த சந்துல குடியிருக்கறதா சொல்லி, உங்க பின்னாடியே போகச் சொன்னார்! இன்னும் எவ்வளவு தூரத்துல உங்க தெரு இருக்குதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"

வீடு

ராகவனால் நம்பவே முடியவில்லை. பாரிமுனையில் ஒரு சிறிய சந்திலுள்ள மருந்து கம்பெனியில் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அவனுக்கு, மயிலாப்பூரில் நாற்பது லட்ச ரூபாய் மதிப்பில் ஒரு பிளாட்டுக்குச் சொந்தக்காரனாவது கனவில் கூட நடக்காத விஷயமாக இருந்தது. ஆனால், அது உண்மையிலேயே இப்போது நடந்து விட்டது. அதைத்தான் ராகவனால் நம்ப முடியவில்லை.

ராகவனுடைய மனைவி ரமாவுடைய அண்ணன் பாஸ்கர் அமெரிக்காவில் ஒரு பெரிய நிறுவனத்தில் சாஃப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்கிறான். அவன் மூலம் தான் ராகவனுக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்தது.

ஒரு மாதம் விடுமுறையில் பாஸ்கர் இந்தியாவுக்கு வந்தான். சௌகார்பேட்டில் ஒரு ஒண்டு குடித்தனத்தில் தன் தங்கை அவஸ்த்தைப்படுவதைச் சகிக்காமல் மயிலாப்பூரில் விலையுயர்ந்த பிளாட் வாங்கித் தந்தான்.

வாடகை கொடுக்க வேண்டிய செலவு மிச்சம் என்று ராகவன் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த போது தான், ரமா மூலம் கிடைத்த அச்செய்தி ராகவன் தலையில் இடியென விழுந்தது. பாஸ்கர் ராகவனுக்குக் கொடுத்தது இலவசமாக இல்லையாம்; மாதா மாதம் நான்காயிரம் ரூபாய் தவனையாகத் தந்து கடனை அடைக்க வேண்டுமாம்.

ராகவன் பாஸ்கரை மனதில் கண்டபடி திட்டித் தீர்த்தான். அவனை நேரில் பார்த்து நன்றாகத் திட்ட வேண்டும் என்று கறுவிக் கொண்டே ஆபீசிலிருந்து வீட்டுக்கு வந்தான் ராகவன். வாசலிலேயே பாஸ்கரின் குரல் வீட்டுக்குள்ளிருந்து வருவதைக் கேட்டு, உள்ளே போகாமல் வெளியிலிருந்தபடியே பாஸ்கருக்கும் ராமாவுக்கும் நடந்த சம்பாஷனையைக் கேட்டான்.

"என்ன அண்ணா! உதவி செய்கிற மாதிரி செய்துட்டு, இப்போ மாசா மாசம் பணம் கொடுக்கணும்னு சொல்றியே!" - அண்ணனைக் கடிந்துக் கொண்டாள் ரமா.

"எல்லாம் காரணமாத்தான் ரமா! ஓசியிலேயே பெரிய வீடு கிடைச்ச சந்தோசத்துலே உன் புருஷன் கண் மண் தெரியாமல் அனாவசியச் செலவு பண்ணினா என்ன செய்யறது! அதைத் தடுக்கத்தான் இந்தத் திட்டம்! மாசா மாசம் உன் புருஷன் கொடுக்கற பணத்தை உன் குழந்தை பேரில் டெபாசிட் செய்யப் போறேன். நாளைக்கு அந்தப் பணம் குழந்தையோட எதிர்காலத்துக்குப் பயன்படும்." பாஸ்கர் சொல்லி முடிக்க, அவனுடைய பெருந்தன்மையை நினைத்து ராகவன் கண் கலங்கினான்.

சொல்லத்தான் நினைக்கிறேன்

மகேஷ் எப்படியும் இன்று அந்த விஷயத்தைப் பற்றி ஹேமாவிடம் சொல்லிவிட தீர்மானித்தான். ஆறு மாதங்களுக்கு முன் ஹேமா அவன் வேலை செய்யும் நிறுவனத்தில் சேர்ந்ததிலிருந்து அவளை மகேஷ் உன்னிப்பாகக் கவனித்து வருகிறான். அவளுடைய சாதுர்யமான பேச்சும், அதே சமயம் நாகரிகமாக அனைவரிடமும் அவள் நடந்து கொள்ளும் விதமும் அவனை மிகவும் கவர்ந்தன. காலப்போக்கில் அதுவே காதலாகவும் மாறி விட்டது. எப்படியும் தன் காதலைப் பற்றி ஹேமாவிடம் சொல்லிவிட மகேஷ் தீர்மானித்தான்.

ஆனால், அதற்கு முன்பாக ரமாவிடமும் இதைப் பற்றி பேச வேண்டும். என்னதான் இருந்தாலும், ரமாதானே மகேஷுடைய மனைவி. பின்னால் எந்தவிதப் பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே.

ரமாவுடன் மகேஷுக்குத் திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் அவர்களிடையே சுமூகமான உறவில்லை. ரமாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபமே மகேஷை ஹேமாவைக் காதலிக்கச் செய்தது.

முதலில், ரமாவுடனான உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தான் மகேஷ். அவளை விவாகரத்து செய்து விட்டால், ஹேமாவைத் திருமணம் செய்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. அன்றே, மகேஷ் ரமாவிடம் அதைப் பற்றி பேசிவிட நினைத்தான்.

"உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் ரமா"

"அதுக்கு முன்னால நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்" - ரமா பேசினாள்.

"சொல்லு!" புரியாமல் மகேஷ் கேட்டான்.

"நான் உங்களை டிவோர்ஸ் செய்ய தீர்மானிச்சிருக்கேன்!"