Saturday, February 21, 2009

நினைவில் நின்ற முகம்

இந்தியாவில் எங்கும் குண்டு வெடிப்புகளோ தீவிரவாத தாக்குதல்களோ நேற்று நடக்கவில்லை. மதக் கலவரமோ ஜாதிக் கலவரமோ அதிசயமாக நடக்கவில்லை. அதனால், இன்றைய செய்தித்தாள்களில் முதல் பக்கத்தில் தலைப்புச் செய்தியாக அந்த பிரபல தமிழ் - மலையாள நடிகையின் மரணமே இடம் பெற்றிருந்தது. அந்த நடிகையின் புகைப்படம் எனக்குச் சில பழைய சம்பவங்களை நினைவுப்படுத்தியது.

சுமார் இருபது வருடங்களுக்கு முன், எனக்கு பத்து வயதிருக்கும். திருநெல்வேலியில் வாழ்ந்து வந்தேன். திருநெல்வேலியில் பிரபலமான கோவிலான நெல்லையப்பர் கோவில் சுமார் பன்னிரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள பிரம்மாண்டமான கோவில். இவ்வளவு பிரம்மாண்டமான பிரபலமான கோவிலில் கூட்டம் மட்டும் எப்போதுமே குறைவாகத் தான் இருக்கும். சில சமயங்களில் கோவில் பிரகாரத்தில் தனியாகப் போகவே பயமாக இருக்கும். அந்த அளவுக்குக் கோவில் வெறிச்சோடி இருக்கும். ஆனால், அன்றைய தினம் கோவில் பிரகாரத்தில் நல்ல கூட்டம். காரணம் எதுவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கூட்டத்தை நெருங்கி பார்த்தேன். அங்கே ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.

அது தான் நான் பார்க்கும் முதல் ஷூட்டிங் என்பதால் எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னுடைய அபிமான நடிகர்கள் யாராவது கண்களில் தென்படுகிறார்களா என தேடிப் பார்த்தேன். அது மலையாள அல்லது தெலுங்கு பட ஷூட்டிங்காக இருக்க வேண்டும். எனட்ட்குத் தெரிந்த முகங்கள் எதுவும் தென்படவேயில்லை. ஏமாற்றத்துடன் திரும்ப நினைத்தபோதுதான் அந்த நடிகையின் முகம் தென்பட்டது. அந்த நடிகையைப் பல தமிழ்ப் படங்களில் பார்த்துள்ளேன். என்னுடைய அபிமான நட்சத்திரங்கள் பலருக்கு அம்மாவாகவும் அண்ணியாகவும் நடித்துள்ளார்.

அந்த கூட்டத்திலேயே நான் தான் மிகவும் இளையவன் - சிறுவன். அந்த நடிகை என்னைப் பார்த்து சிரித்து அருகில் அழைத்தார். என் பெயரையும் வகுப்பையும் பற்றி விசாரித்தார். அப்போது என்னுடைய நண்பர்கள் சிலர் தங்கள் அபிமான நட்சத்திரங்களுடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பெருமையாக என்னிடம் காட்டுவது எனது நினைவுக்கு வந்தது. அந்த நடிகையிடம் என்னுடைய விருப்பமாக அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று சொன்னேன். உடனே அவரும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டார். தம்முடைய புகைப்படக்காரரை அழைத்து அவரையும் என்னையும் சேர்த்து புகைப்படம் எடுக்க சொன்னார். என்னுடைய முகவரியை வாங்கிக் கொண்டு, கண்டிப்பாக புகைப்படத்தை அனுப்பி வைப்பதகாவும் அந்த நடிகை சொன்னார்.

அன்றிலிருந்து அந்த நடிகை என்னுடைய அபிமான நடிகையாகி விட்டார். அவருடைய படங்களை ஒன்று விடாமல் பார்க்க ஆரம்பித்தேன். அவர் புகைப்படம் அனுப்புவார் என்று பல மாதங்கள் காத்திருந்தேன். சில வருடங்களுக்குப் பிறகு அவருடைய புகைப்படத்தைப் பற்றிய சிந்தனையை அறவே விட்டு விட்டேன். ஆனால் அவர் நடித்த படங்களை பார்ப்பதை மட்டும் நிறுத்தவேயில்லை.

பல வருடங்களுக்குப் பிறகு அலுவல் காரணமாக அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும்போது மும்பை ஏர்போர்ட்டில் அவரை மீண்டும் சந்தித்தேன். நானாகச் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன் பழைய சம்பவத்தையும் அவருக்கு நினைவுப்படுத்த முயன்றேன். இந்த முறையும் அவருடன் சேர்ந்து புகைப்படம் பிடிக்க ஆசைதான். ஆனால் விமான நிலையத்தின் பாதுகாப்பு கெடுபிடிகளால் அந்த ஆசை நிறைவேறவில்லை.

மீண்டும் அவரை எப்போது சந்திப்பேன் என்று ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் அவரை நான் மூன்றவாது முறை சந்தித்தபோது ஏன் சந்தித்தோம் என்று நினைக்க வேண்டியிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு உயிருடன் போராடிக் கொண்டிருந்த என்னுடைய நண்பரைப் பார்ப்பதற்காக கேரளா திருச்சூரிலுள்ள ஒரு மருத்துவமனைக்குப் போனேன். அந்த மருத்துவமனையில் என் நண்பர் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு அடுத்த அறையில் அந்த நடிகை அனுமதிக்கப் பட்டிருந்தார். நானாகச் சென்று என்னை மீண்டும் அறிமுகப்படுத்திக் கொண்டேன். ஆனால் இம்முறை அவருக்கு என்னை நன்றாகவே நினைவிருந்தது. கேன்சரால் பாதிக்கப்பட்ட அவருடைய உருவம் சுத்தமாக மாறி விட்டிருந்தது. அவருடைய வசீகரம்மான முகம் களையிழந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு இருந்தது. என்னை மிகவும் வாட்டியது. இம்முறை அவராகவே கேட்டார் - தம்முடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்று. ஆணால் எனக்குத்தான் விருப்பமில்லை. அவருடைய களையிழந்த முகத்தைப் புகைப்படம் எடுத்து அதை என் நினைவாக வைத்துக் கொள்ளவோ யாருக்கும் காட்டவோ என் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. சீக்கிரம் அவர் குணமாக வேண்டும்; மறுபடியும் படங்களில் நடிக்க வேண்டும் என்று வாழ்த்தி விட்டு அவரிடமிருந்து விடைபெற்றேன்.

இன்று அவர் நம்மிடையே இல்லை. அவருடைய புகைப்படம் கடைசி வரை என்னால் எடுக்க முடியவில்லை. ஆனால் அவருடைய களையான முகம் என்றுமே என் நினைவில் நிற்கும்.